அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, அடுத்த வாரம் பாகிஸ்தான் வருகிறார்
உலக அளவிலான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வந்தது.
ஆனால், முந்தைய நவாஸ் ஷெரீப் மற்றும் அப்பாசி தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) அரசுகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்ததுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வந்ததும் அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் தன் மண்ணில் இருந்து செயல்படுகிற பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. ஆனாலும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால், அந்த நாட்டுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு நிதி உதவிகளை அமெரிக்கா குறைத்துக்கொண்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தல் வெற்றிக்காக இம்ரான்கானை வாழ்த்திய வேளையில், அங்கு உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டும் என்று இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் மைக் பாம்பியோ, அடுத்த வாரம் பாகிஸ்தான் வருகிறார். அவருடன் அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜோசப் டன்போர்டும் வருகிறார்.
இதை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “இம்ரான்கானை சந்தித்து பேசுகிறபோது, மைக் பாம்பியோவும், ராணுவ தளபதி டன்போர்டும் (பயங்கரவாத ஒழிப்புக்கு) நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவார்கள். நமது பொதுவான இலக்கு, பயங்கரவாத ஒழிப்புதான்” என கூறினார்.
பாகிஸ்தான் வருகையின்போது அவர்கள் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பற்றி பிரச்சினை எழுப்புவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
ஆனால் இது தொடர்பாக ஜேம்ஸ் மேட்டீசிடம் நிருபர் ஒருவர், “பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் புதிய தலைமையின் வாக்குறுதி மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?”என கேள்வி எழுப்பியபோது அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார்.