Breaking News
அரசியலை தூய்மைப்படுத்தும் முதல்–அமைச்சர் வேடத்தில் விஜய்?

ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் நடிகர்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பி உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியுள்ளார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை ஆரம்பித்துள்ளார். விஷாலும் மக்கள் நல இயக்கத்தை தொடங்கி தேவைப்பட்டால் இது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார்.

விஜய்யும் அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதற்கு நிர்வாகிகளை நியமித்து வலுப்படுத்தி இருக்கிறார். மாவட்டம் தோறும் நலிந்தவர்களுக்கு ரசிகர்கள் மூலமாக தொடர்ந்து நலத்திட்டங்கள் வழங்கச் செய்து மக்களுக்கு நெருக்கமாகி வருகிறார். அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ரசிகர்களும் வருங்கால முதல்வரே என்ற வாசத்துடன் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து தேர்தலில் ஓட்டுப்போட சொந்த ஊருக்கு திரும்பும் அவர் தனது ஓட்டு ஏற்கனவே பதிவானது அறிந்து ஆவேசப்படுகிறார்.

அரசியலை தூய்மைப்படுத்த களம் இறங்குகிறார். இதனால் அரசியல்வாதிகள் அவர் மீது பகையாக, அவர்களுக்கு போட்டியாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்று ஜெயித்து முதல்–அமைச்சர் ஆவது போல் திரைக்கதை அமைத்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.