ஊட்டி மலை ரெயில் முழுவதையும் பதிவு செய்து, பயணம் சென்ற தேனிலவு தம்பதி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி கிரகாம் வில்லியம் லைன் (வயது 30)-சில்வியா பியோசிக் (27). கிரகாம் வில்லியம் லைன் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சில்வியா பியோசிக் ஆராய்ச்சியாளர் ஆவார்.
இவர்கள் தேனிலவுக்காக இந்தியா வர முடிவு செய்தனர். குளுகுளு நகரமான ஊட்டியை பற்றி கேள்விப்பட்ட இவர்கள், அங்கு தங்கள் தேனிலவை கொண்டாட தீர்மானித்தனர். யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள ஊட்டி மலை ரெயிலில் வேறு பயணிகள் யாரும் இல்லாமல் புதுமனைவியுடன் தனியாக தேனிலவு பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்த கிரகாம் வில்லியம் லைன், அதற்காக இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா துறையில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 321 ரூபாயை கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்தார்.
தேனிலவு பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த கிரகாம் வில்லியம் லைனும், சில்வியா பியோசிக்கும் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று காலை மேட்டுப்பாளையம் சென்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரெயில் வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அதன்பிறகு கிரகாம் வில்லியம் லைன்-சில்வியா பியோசிக் தம்பதிக்காக சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரெயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கிளம்பியது. என்ஜினுடன் 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயிலில் 153 பேர் பயணம் செய்யலாம். ஆனால் புதுமண தம்பதியர் மட்டுமே சென்றனர். வேறு பயணிகள் யாரும் செல்லவில்லை.
கணவனும், மனைவியும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியபடி, பசுமை நிறைந்த மலையின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த வண்ணம் பயணம் செய்தனர். கேமரா மூலம் புகைப்படங்களையும் எடுத்தனர்.
இந்த தேனிலவு பயணம் குறித்து கிரகாம் வில்லியம் லைனும், அவருடைய மனைவி சில்வியா பியோசிக்கும் கூறியதாவது:-
நாங்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறோம். ஆனால் இந்தியா அமைதியான, அழகான நாடாகும். இங்குள்ள ஊட்டி மலை ரெயிலில் தேனிலவு பயணம் செய்தது அற்புதமான அனுபவம். குகை வழிப்பயணம் திகிலை ஏற்படுத்துவதாக இருந்தது. நீராவி என்ஜினில் இயங்கும் இந்த ரெயிலில் பயணம் செய்யும்போது குழந்தைகள் போல் நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம். ரெயிலில் போகும்போது ஜன்னல் வழியாக கண்ட இயற்கை காட்சிகள் எங்களை மெய்மறக்க வைத்தது.
நாங்கள் பயணம் செய்த போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதும், சில இடங்களில் சாரல் மழை பெய்ததும் ரசிக்கக்கூடியதாக அமைந்தது. இந்த ரெயிலில் சக பயணிகளுடன் செல்வது ஒரு அனுபவம். ஆனால் நாங்கள் இருவர் மட்டும் தேனிலவு பயணம் செய்தது வாழ்க்கையின் இனிமையான தருணம் ஆகும். ஊட்டி மிகச்சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.