Breaking News
வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 204 மி.மீ. ஆனால் ஜூன் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை 179 மி.மீ. தான் மழை பெய்துள்ளது. நெல்லை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டலத்தில் சுழற்சியும், வெப்பச்சலனமும் உள்ளது. இதன் காரணமாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மற்ற சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சிதம்பரம், விழுப்புரம் தலா 9 செ.மீ., பரங்கிப்பேட்டை, கடலூர் தலா 8 செ.மீ., பண்ருட்டி 7 செ.மீ., சேத்தியாதோப்பு, ஆணைக்காரன்சத்திரம் தலா 6 செ.மீ., திருச்சுழி, மாமல்லபுரம் தலா 5 செ.மீ., மயிலாடுதுறை, ஏற்காடு, திருக்கோவிலூர், சென்னை நுங்கம்பாக்கம், மாதவரம், உளுந்தூர்பேட்டை, சீர்காழி, புழல் தலா 4 செ.மீ., சோழவரம், வானூர், தேவலா, மதுரை விமானநிலையம், சாத்தனூர் அணை, தொழுதூர், தாம்பரம், கோவிலாங்குளம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர், செங்குன்றம், விருத்தாசலம், புதுச்சேரி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 20 இடங்களில் தலா 2 செ.மீ. மழையும், 15-க்கு மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை?

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று கேட்டதற்கு, “வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும். பசிபிக் கடலில் வெப்பம் காரணமாக எல்.நினோ நிகழ்வு வடகிழக்கு பருவமழைக்கு சாதமாக இருக்கிறது. எனவே இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.