ஐ.ஜி. மீதான பாலியல் புகார்: சிபிசிஐடி விசாரிக்க காவல்துறையின் உள்புகார் விசாரணை குழு பரிந்துரை
தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது. இந்த புகார் அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டு இருந்தார். சீமா அகர்வால் தலைமையிலான விஷாகா குழு விசாரித்து வந்த நிலையில், புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை உள்புகார் விசாரணை குழுவான விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து விசாகா கமிட்டி அளித்துள்ள விளக்கத்தில், பாலியல் புகார் அளித்த எஸ்பி ஆக.,29 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. புகாருக்குள்ளான ஐஜி.,யை இடமாற்றம் செய்ய வேண்டும். குழுவை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் எஸ்பி கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கை குறித்து முடிவெடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் இந்த புகார் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.
புகாருக்குள்ளானது லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஐஜி குறித்து பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண் எஸ்பி., அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதால் சிபிசிஐடி.,க்கு மாற்றம் பரிந்துரைத்துள்ளோம் என ஏடிஜிபி சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.