ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
ரூபாய் நோட்டுகளில் உள்ள அழுக்குகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ரூபாய் நோட்டுக்களில் உள்ள மாசுக்களால் சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இந்த தகவல் உண்மையானது என்றால், அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள் வர்த்தக துறையிலேயே புழங்குவதால் வர்த்தகர்கள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதனால் இந்திய மருத்துவ கழகம், ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும். அதனை தடுக்கும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.