அரசு டாக்டர்களுக்கு ‘ஆப்பரேஷன் இலக்கு’
‘அரசு மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள், மாதந்தோறும், குறைந்தது, ஐந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு, இருதய பாதிப்பு, நீரிழிவு, புற்று நோய் உட்பட, பல நோய்களுக்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ளது. ஏழை, எளிய மக்கள், இதுபோன்ற சிகிச்சையை மேற்கொள்ள, அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால், பல அரசு மருத்துவமனைகளில், டாக்டர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, சிகிச்சையில் மெத்தனம் உள்ளிட்ட பல காரணங்களால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், ‘நோயாளிகள் நலன் கருதி, மருத்துவமனையில் பணிபுரியும் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள், தங்கள் துறை சார்ந்து, மாதத்துக்கு, குறைந்தபட்சம், ஐந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என, மருத்துவப்பணிகள் இயக்குனரகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், மருத்துவர்கள், தங்கள் துறை சார்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை, உன்னிப்பாக கவனிக்க வாய்ப்பு ஏற்படும் என, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.