ஏமன் வான்தாக்குதலில் 40 குழந்தைகள் பலி: சவுதி கூட்டுப்படை பொறுப்பேற்பு
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப்போரில், அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 9-ந் தேதி சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்த பஸ் சிக்கியது. இதில் அப்பாவி குழந்தைகள் 40 பேர் பலியானது சர்வதேச சமூகத்தை வேதனையில் ஆழ்த்தியது. இது குறித்து நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை குரல் கொடுத்தது.
இந்த நிலையில் முதன்முதலாக இந்த தாக்குதலை நடத்தியதற்கு சவுதி கூட்டுப்படையினர் பொறுப்பேற்றனர். இது குறித்து நேற்று முன்தினம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து பொறுப்பேற்கச் செய்வோம்” என கூறினர்.
இது குறித்து அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நடந்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டு உள்ளது.