2 குழந்தைகளின் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை வீட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க பேட்டி
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை, திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய்(வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய்(7) என்ற மகனும், கார்னிகா(4) என்ற மகளும் இருந்தனர். கணவன், மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அதிகாலை விஜய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது 2 குழந்தைகளும் கொல்லப்பட்டு இருந்தனர். அபிராமி, தனது கள்ளக்காதலால் குழந்தைகள் இருவரையும் விஷம் வைத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார். பின்னர் குன்றத்தூர் போலீசார் அவரையும் அவருடைய கள்ளக்காதலனும், பிரியாணி கடை ஊழியருமான சுந்தரத்தையும்(28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இருந்து விஜய் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரும் அப்பகுதி மக்களும் இன்னும் மீளவில்லை.
இதுபற்றி அபிராமி வசித்த வீட்டின் உரிமையாளர் சுமதி கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விஜயும், அபிராமியும் திருமணம் முடிந்து அவர்களது மூத்த மகன் அஜய் 3 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வாடகைக்கு வந்தனர். கார்னிகாவும் இங்குதான் பிறந்தாள். விஜய்க்கு தாய், தந்தை இல்லாத காரணத்தால் அவருக்கு நாங்கள் தாய், தந்தைபோல் இருந்தோம்.
அதுமட்டுமின்றி இரண்டு குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களிடம் வளர்ந்ததை விட எங்கள் வீட்டில்தான் அதிகம் வளர்ந்தார்கள்.
எங்களை அத்தை, மாமா என்றுதான் அழைப்பார்கள். மேலும் எனது கணவரும், மகனும் அந்த 2 பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். அவர்களை எங்கள் பேரக்குழந்தைகள் போல் பாவித்து வந்தோம். சில மாதங்கள் வாடகை கூட தராமல் இருந்து வந்து உள்ளனர். அதை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. அந்த குழந்தைளை அப்படி பார்த்து வந்தோம்.
விஜய் வருமானத்திற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையிலும் கூட குடும்பத்தை நன்றாக கவனித்து வந்தான். தற்போது நல்ல வருமானம் வரும்போது அவனது குடும்பம் அவனிடத்தில் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அபிராமிக்கு ஒரு மொபெட் வாங்கி கொடுத்தான். அப்போதிலிருந்து அவளது நடவடிக்கைகள் சரியில்லாமல் போனது. அடிக்கடி மொபெட்டை எடுத்துக்கொண்டு வெளியே போவதும், வருவதுமாக இருந்தாள். பெரும்பாலும் ஓட்டல்களில் ஆர்டர் செய்து பீட்சா, பர்கர், பிரியாணி என சாப்பிட்டு வருவாள்.
அவளிடம் ஆடம்பர செலவு அதிகமாக இருந்தால் அந்த மாதம் அவரது கணவருக்கு நல்ல வருமானம் என்று அர்த்தம். செலவு குறைந்தால் வருமானம் கொஞ்சம் குறைவு என்று புரிந்து கொள்வோம்.
வீட்டு படிக்கட்டில் ஏறி கார்னிகா என்று அழைத்தால் அந்த குழந்தை அப்படியே ஓடி வரும். அந்த பையன் அஜய்யும் ஆங்கிலத்தில் ரொம்ப அழகாக பேசுவான். எப்போது பார்த்தாலும் நெற்றியில் பொட்டு, விபூதி இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
அந்த பிள்ளைகளை எங்களிடத்தில் விட்டு சென்றிருந்தால் கூட நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்போம். இப்படி கொலை செய்து விட்டு சென்று விட்டாளே, பாதகி. அந்த பிஞ்சுக் குழந்தைகளை நஞ்சு வைத்துக் கொல்ல அவளுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.
இப்படி எங்களையும் இந்த பகுதி மக்களையும் இப்படி அசிங்கப்படுத்தி விட்டு செல்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த வேதனையில் இருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை. மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் சுமதி உடல் அளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விஜய்க்கு மட்டும் பேரிழப்பு அல்ல. அந்த பகுதி மக்களையே பேரிழப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, என்பதே உண்மை.