பிரேசில்: 200 ஆண்டு பழமையான அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து
பிரேசில் நாட்டின் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய பெண்ணின் எலும்புக்கூடு உள்பட 2 கோடி அரிய பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது.
பிரேசில் நாட்டின் கடலோர நகரமான ‘ரியோ டி ஜெனிரோ’வில் 200 ஆண்டுகள் பழமையான தேசிய அருங்காட்சியகம் உள்ளது. 1818-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய, ரோமானிய கலைபொருட்கள், அமெரிக்க கண்டம் மற்றும் பிரேசிலில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் படிமங்கள், கி.பி. 1500-ம் ஆண்டு முதல் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட 1889-ம் ஆண்டு வரை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்கள், தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த வரலாற்றுச் சின்னங்கள் உள்பட 2 கோடிக்கும் அதிகமான அரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.
மிகவும் புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்துக்கு தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என்பதால் ஏராளமானோர் அருங்காட்சியகத்தை காண வந்தனர். வழக்கம்போல் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு பார்வை நேரம் முடிந்ததும் அருங்காட்சியகம் மூடப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் அருங்காட்சியகத்தில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அருங்காட்சியகம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அதற்குள்ளாக தீ முழுமையாக அருங்காட்சியகத்தை ஆட்கொண்டுவிட்டதால் அங்கு இருந்த 2 கோடிக்கும் அதிகமான அரிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த அருங்காட்சியகத்தில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்து மடிந்த லூசியா என்ற பெண்ணின் எலும்புக்கூடு பாதுகாக்கப்பட்டு வந்தது. இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் விலங்கின் எலும்புகளும் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துவிட்டது.
இருந்த போதிலும் அருங்காட்சியகத்தில் இருந்த பொக்கிஷ பொருட்களின் நிலைமை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தீ விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் எதுவும் இல்லை. மேலும் தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவரவில்லை.
இந்த தீ விபத்து குறித்து அதிபர் மிச்செல் டெமர் தனது டுவிட்டர் பக்கத்தில், “கணக்கிட முடியாத இழப்பு பிரேசிலுக்கு ஏற்பட்டுள்ளது. 200 ஆண்டுகள் உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் அறிவை இழந்துவிட்டோம்” என வேதனை தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் மோசமான பொருளாதார நிலை காரணமாக இந்த அருங்காட்சியகத்தை பாதுகாக்க அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால்தான் தீ விபத்தை முற்றிலுமாக தடுக்க முடியாமல் போனது என்று ரியோ டி ஜெனிரோ நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.