Breaking News
2020-ம் ஆண்டு ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் – சரத் கமல் நம்பிக்கை

‘2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா பதக்கம் வெல்லும்’ என்று ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மனிகா பத்ரா ஆகியோரை கொண்ட இந்திய ஜோடியும் வெண்கலப்பதக்கம் வென்றது. 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியா பதக்கம் வென்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், வேளச்சேரி நீச்சல் வளாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பதக்கம் வென்று சாதனை படைத்த 36 வயதான சரத் கமல் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் ‘டாப்-10’ இடங்களில் உள்ள 7 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நமது ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் ஜோடி சேர்ந்த மனிகா பத்ராவும் அருமையாக விளையாடினார்.

சவால் நிறைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோவில் (ஜப்பான்) 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. என்னுடைய இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர்கள், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் எனது குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனது பதக்கத்தை பயிற்சியாளர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

2004-ம் ஆண்டு முதல் நான் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறேன். இதே உத்வேகமும், உடல் தகுதியும் நீடித்தால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை கூட என்னால் விளையாட முடியும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக கடினமாக தயாராகுவதே எனது அடுத்த இலக்காகும். இவ்வாறு சரத் கமல் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.