Breaking News
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான அலஸ்டயர் குக் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஏற்கனவே விடைபெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

33 வயதான குக் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்குரியவர். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த 6-வது வீரர் ஆவார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் குக் நல்ல பார்மில் இல்லை. கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தம் 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குக் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான குக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக ஆழ்ந்து ஆராய்ந்ததை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன். நான் இங்கிலாந்து அணிக்காக எல்லாவிதமான பங்களிப்பையும் அளித்து விட்டேன். இனிமேல் அளிக்க எதுவுமில்லை. நான் கற்பனை செய்து பார்க்காததை விட அதிகம் சாதித்து இருக்கிறேன். இங்கிலாந்து அணியில் நீண்ட காலம் ஆடியதை நினைத்து பெருமை அடைகிறேன். இங்கிலாந்து அணி வீரர்களுடன் தங்கும் அறையை தவற விட இருப்பது குறித்து சில வீரர்கள் கடினமாக நினைக்கலாம். ஆனால் விடைபெற சரியான தருணம் இது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது கவுரவம் நிறைந்தது என்பதை அறிவேன். அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட இதுவே சரியான தருணம் என்பது எனக்கு தெரியும்.

இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் படை மற்றும் எனது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முன்னாள் கேப்டன் கிரகாம் கூச், எஸ்செஸ் கிளப் நிர்வாகிகள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருங்காலங்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஓய்வுக்கு பிறகு எஸ்செஸ் கிளப் அணியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அலஸ்டயர் குக் 160 டெஸ்ட் போட்டியில் விளையாடி 12,254 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். 2011-ம் ஆண்டில் பர்மிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 294 ரன்கள் எடுத்ததே குக்கின் அதிகபட்ச ஸ்கோராகும். குக் இங்கிலாந்து அணிக்காக 92 ஒருநாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.