விலை உயரும் அபாயம் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கிடு, கிடுவென உயர்ந்து வந்தது.
இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் ஆகிவற்றின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. மேலும், இந்த வாரத்தில் பங்கு சந்தையின் முதல் தினமான நேற்று (திங்கட் கிழமை) சர்வதேச அளவில் இந்தியாவின் பண மதிப்பு திடீர் சரிவை சந்தித்தது. இதனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நேற்று மேலும் உயர்ந்தது.
அதாவது கடந்த சில நாட்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று நேற்று முன்தினம் 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது.
பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகள் வரலாறு காணாத இந்த விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது ஒன்றே இந்த விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள், பொருளாதார வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த சுங்க வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனை வரியை குறைத்து மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின் அழுத்தத்தை குறைத்திட அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
முரண்பாடு இல்லையா?
இங்கே உள்நாட்டில் எட்டாத உயரத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திட அனுமதித்துவிட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம்?. அந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா? அப்படி செய்து கொண்டிருப்பது, தேச நலனை வஞ்சிப்பதாகாதா? போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
எனவே, இவற்றுக்கு எல்லாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் துணையோடும், ஒப்புதலோடும் இந்த விலையேற்றம் விரைவில் ரூ.100-ஐ எட்டிவிடப்போகிறது. இத்தகு விலையேற்றத்தால், பொதுமக்கள் நேரிடையாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மறைமுகமாகவும் பெரும் சுமையை ஏற்கவேண்டிய அவலநிலை தொடர்கதையாகி வருகிறது. இந்த விலை உயர்வை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கைவிடவேண்டும், விலையை குறைக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சூழலில் தமிழக அரசு மதிப்பு கூட்டுவரியில், மத்திய அரசு உற்பத்தி வரியில், பெருமளவில் குறைக்க முன்வர வேண்டும். அத்துடன், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணய உரிமைகள் குறித்து மறுசிந்தனை செய்து அத்தகைய உரிமையை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறி உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து, பேரபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.