Breaking News
நோய் பரப்பும் ரூபாய் நோட்டுகள் ஆய்வு நடத்த மத்திய மந்திரிக்கு கோரிக்கை

நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கைமாறி, பல கோடி பேரின் கைகளில் தவழ்ந்து வருகின்றன. இதனால், ரூபாய் நோட்டுகள் மாசடைந்து, நோய் பரப்பிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் 120 நோட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 86 சதவீத நோட்டுகளில், இ கோலி உள்ளிட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நோட்டுகள், டாக்டர், வங்கி, மார்க்கெட், இறைச்சி வியாபாரி, மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. டாக்டர்களிடம் இருந்து பெற்ற ரூபாய் நோட்டுகளில் கூட நோய்க்கிருமிகளின் தாக்கம் இருந்தது.

இதுபோல், மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 78 வகையான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள், ரூபாய் நோட்டுகளில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுபோன்ற ஆய்வு முடிவுகளையும், பத்திரிகை செய்திகளையும் சுட்டிக்காட்டி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், ரூபாய் நோட்டுகளால் நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதத்தின் நகலை அனுப்பி உள்ளது.

ரூபாய் நோட்டுகளில் உள்ள நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை பூஞ்சைகளாக இருந்தபோதிலும், வயிற்றுக்கோளாறு, காசநோய், வயிற்றுப்புண் ஆகியவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்களும் நோட்டுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சிறுநீரக தொற்று, மூச்சுக்குழாய் தொற்று, தோல் நோய் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவையும் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.