மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது விவகாரம்: முக்கிய ஆதாரமான கடிதத்தை எப்படி பகிரங்கப்படுத்தலாம்? – போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் 5 மாவோயிஸ்டு ஆதரவாளர்களை கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரும் அடங்குவார்.
இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் கூறினர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்வீர் சிங், புனே மாவட்டம் பீமா-கோரேகாவ் வன்முறையில் கடந்த ஜூன் மாதம் கைதானவர்களும், தற்போது கைதான மாவோயிஸ்டு ஆதரவாளர்களும் தகவல் பரிமாறிக்கொண்ட கடிதத்தை படித்து காட்டினார்.
இதற்கிடையே புனே போலீசார் இந்த வழக்கை நியாயமற்ற, தீய எண்ணத்துடன் விசாரித்து வருவதாக கூறி சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிருதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் கடிதத்தை பத்திரிகையாளர்கள் முன்னால் போலீசார் படித்து காட்டி பகிரங்கப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசார் எவ்வாறு இப்படி செய்யலாம்? இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வழக்கு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது தவறானது என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.