ஜப்பானில் சூறாவளி: கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
ஜப்பானின் மேற்கு பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இஷிகாவாவில் திடீரென புயல் வீசியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால், வீடுகளின் மேற்கூரை நெடுந்தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.
இதனால், கன்சாய் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கன்சாய் விமான நிலையத்திற்குள் வெள்ளம் நீர் புகுந்ததால், விமான போக்குவரத்து முடங்கியது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்குள் சிக்கினர். படகுகள் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்குள் உள்ள ஸ்டோர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப்பொருட்களை வாங்கும் காட்சிகளை உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
விமான நிலையத்திற்குள் சிக்கியுள்ள பயணிகள் அனைவரும் அருகில் உள்ள கோபே விமான நிலையத்திற்கு, அதிவேக படகுகள் மூலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். விமான நிலையம் எப்போது மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பது நிச்சயமாக தெரியவில்லை. சாலைகள் மற்றும் சில ரயில்வே பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 12 லட்சம் மக்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் என அனைத்து மூட்பபட்டுள்ளன.