பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, நேருவின் பல்மருத்துவர் மகன்
ஆரிப் ஆல்வி பற்றிய ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய தலைவர், நம்பிக்கைக்கு உரியவர்.
ஆரிப் ஆல்வியின் தந்தை டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி ஆவார். தேசப் பிரிவினைக்கு முன்பாக இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக விளங்கினார். அப்போது அவருக்கு நேரு எழுதிய கடிதங்களை குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி, பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிற முகமது அலி ஜின்னா குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என தகவல்கள் கூறுகின்றன.
ஆரிப் ஆல்வியின் முழுப்பெயர் டாக்டர் ஆரிப் உர் ரகுமான் ஆல்வி ஆகும். இவர் கராச்சியில் பிறந்தவர் ஆவார். இவரும் தந்தையைப் போலவே பல் மருத்துவர் ஆவார். முதன்முதலாக 1997–ம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான்கான் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2013–ம் ஆண்டு தேர்தலில் கராச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்தார்.
பாகிஸ்தானில் பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெற்று உள்ள ஜனாதிபதி மம்னூன் உசேன், இந்தியாவின் ஆக்ராவை பூர்வீகமாகக் கொண்டவர். அதேபோன்றுதான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் குடும்பம், டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.