Breaking News
ஜப்பானை புரட்டிப் போட்டது ‘ஜெபி’ புயல் 10 பேர் பலி

ஜப்பான் நாட்டில் நேற்று முன்தினம் ‘ஜெபி’ என்ற புயல் மையம் கொண்டு இருந்தது. ‘ஜெபி’ என்றால் கொரிய மொழியில் ‘விழுங்கு’ என்று பொருளாம். இந்தப் புயல் மிகக்கடுமையான புயலாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்தப் புயல் நேற்று முன்தினம் ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்தது. பின்னர் இந்தப் புயல் ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்சூவை நோக்கி நகர்ந்தது.

‘ஜெபி’ புயல் காரணமாக சமீப காலத்தில் அங்கு இல்லாத அளவுக்கு பெருத்த மழை பெய்தது. மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கட்டிடங்களின் கூரைகள் பறந்தன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், நின்று கொண்டிருந்த வாகனங்கள் கவிழ்ந்தன. பாலங்களில் பல வாகனங்கள் கவிழ்ந்தன. பல இடங்களில் பாலங்கள் தகர்த்தெறியப்பட்டன. பிரமாண்ட கண்டெய்னர் லாரிகள்கூட கவிழ்ந்துவிட்டதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விமான நிலையங்கள், வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயோட்டா, ஒசாகா நகரங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.

கடந்த 25 ஆண்டுகளில் இப்படி ஒரு புயல், மழை ஜப்பானைப் புரட்டிப்போட்டது இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
விமானங்கள், ரெயில்கள், கப்பல்கள் ரத்து செய்யப்பட்டன. குறைந்தது 800 விமான சேவைகள் ரத்தாயின. குறிப்பாக நகோயா, ஒசாகா விமான நிலையங்கள் பாதிப்புக்கு ஆளாகின. புயல் காரணமாக அங்கு இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், அங்கு வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓசாகாவின் கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவித்த சுமார் 3 ஆயிரம் பயணிகள், படகுகளில் உள்ளூர் விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

புயல், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 300 பேர் படுகாயம் அடைந்தனர்.
12 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டன.

புயல், மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் மீட்பு, நிவாரணப்பணிகளை அரசாங்கம் முடுக்கி விட்டு உள்ளது. அரசு தன்னால் இயன்ற அளவுக்கு விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மந்திரிசபை செயலாளர் யோஷிஹிடே சுகா கூறினார்.

கன்சாய் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக பிரதமர் ஷின்ஜோ அபே தனது பேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.