ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கொல்லப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள கானமலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் கடப்பா வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து காமராஜ் உடலை வாங்கச்சென்ற உறவினர்கள் மற்றும் மகனை ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் காலால் உதைத்து, காமராஜ் உடலை அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்து கொண்டு செல்லும்படி மிரட்டியுள்ளனர்.
இது குறித்து மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திராவில் இதுவரை செம்மரம் வெட்ட வந்ததாக நடைபெற்ற என்கவுண்டரில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களை மிரட்டி ஒப்படைத்துள்ளனர்.
ஆந்திராவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். காமராஜ் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், இதுகுறித்து விளக்கம் அளிக்க 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட காமராஜ் உடலை ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.