விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் தள்ளுபடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வக்கீல் சுடலையாண்டி உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் தான் பாதுகாப்பு மற்றும் தீ விபத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நிபந்தனைகளை அரசு உருவாக்கியுள்ளது. இதில் ஐகோர்ட்டு தலையிட விரும்பவில்லை. இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்‘ என்று உத்தரவிட்டனர்.
இதேபோல விநாயகர் சதுர்த்தி தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் உள்ளிட்டோர் தனியாக வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, ‘இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளதாக‘ கூறினர். இதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக உத்தரவிட்டார்.