சென்னையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சோதனை நிறைவு
தமிழகத்தில் தடையை மீறி குட்கா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த ஒரு குட்கா தயாரிப்பு ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவின் ரகசிய டைரி அதிகாரிகள் கையில் சிக்கியது. அந்த டைரியில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு யார்-யாருக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெயர்களும் லஞ்ச பட்டியலில் இடம் பெற்று இருந்தது.குட்கா விற்பனைக்காக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மொத்தம் ரூ.40 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
குட்கா ஊழல் குறித்து விசாரணை நடத்தும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி கடிதம் அனுப்பினார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதால், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தி.மு.க. சார்பில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து நேற்று காலை சிபிஐ சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளான ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், ஷேஷாத்ரி, விற்பனை வரித்துறையைச் சேர்ந்த பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், ஜேஎம் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களான ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலையுடன் நிறைவுப்பெற்றதாக சிபிஐ தரப்பு தெரிவித்தது.
எனினும், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இல்லத்தில் மட்டும் விடிய விடிய சோதனை நடைபெற்றது. சென்னை நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை இன்று காலையும் நீடித்தது. தற்போது சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியானது. 7 சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரமாக நடத்திய சோதனையில், 2 பைகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.