Breaking News
ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.

இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கடிதம் எழுதி உள்ளது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.