அமெரிக்க வங்கியில் துப்பாக்கிச்சூடு: ஆந்திர இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஒகையோ மாநிலம், சின்சினாட்டி நகரின் ஃபவுன்டைன் ஸ்கொயர் பகுதியில் ஃபிப்த் தேர்டு என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. இந்நிலை யில் நேற்று முன்தினம் காலை இங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக சுட் டதில் ஆந்திர இளைஞர் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை சுட்டுக்கொன்றனர். அவர் ஒகையோ மாநிலத்தின் நார்த் பெண்ட் நகரைச் சேர்ந்த ஒமர் என்ரிக் சாந்தா பெரஸ் (29) என அடையாளம் காணப்பட்டார். அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். எனினும் அவரது வெறிச்செயலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை.
இதனிடையே அந்த இளைஞரால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த பிருத்விராஜ் கன்டேபி (25) எனத் தெரியவந்துள்ளது. இவர் அந்த வங்கியில் கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். இவரது தந்தை கோபிநாத், விஜயவாடா வில் ஆந்திர வீட்டு வசதிக் கழகத் தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவத்தில் கொல்லப் பட்ட மற்ற இருவர் பிலிப் கால்டிரோன் (48), ரிச்சர்டு நிவ்கமர் (64) என அடையாளம் காணப்பட்டனர்.