Breaking News
இறுதிப் போட்டியில் நுழைந்து ஒசாகா சாதனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஜப்பானின் நவோமி ஒசாசா முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நவோமி ஒசாகா.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் மிக எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நவோமி ஒசாகா. இதற்கு முன்னர் அதிகபட்சமாக கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் ஜப்பானின் கிமிகோ டேட் அரை இறுதி வரை கால் பதித்திருந்தார்.

இறுதிப் போட்டியில் ஒசாகா 17-ம் நிலை வீராங்கனையும், 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார். செரீனா தனது அரை இறுதியில் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் 19-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு செரீனா முன்னேறுவது இது 9-வது முறையாகும். ஒசாகாவுடனான இறுதிப் போட்டியில் செரீனா வெற்றி பெற்றால் 7-வது அமெரிக்க ஓபன் பட்டத்தையும், 24-வது கிராண்ட் ஸ்லாமையும் கைப்பற்றி செரீனா வில்லியம்ஸ் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இதை அவர் நிகழ்த்தினால் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். மேலும் அமெரிக்க ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற சகநாட்டைச் சேர்ந்த கிறிஸ் எவர்ட்டின் சாதனையையும் செரீனா கடக்கக்கூடும். கிறிஸ் எவர்ட், அமெரிக்க ஓபனில் 6 முறை பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து நவோமி ஒசாகா கூறுகையில், “உண்மையிலேயே செரீனாவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது எனது கனவு நிறைவேறியது போன்று உணர்கிறேன். எனது குழந்தைப் பருவம் முதலே கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் செரீனாவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது.

இந்த தரு ணத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக் கிறேன். எனினும் செரீனா வுக்கு எதிரான ஆட்டத்தை மற் றொரு போட்டியாகவே நினைக்கிறேன். நான் அவரை எனது முன்மாதிரியாக நினைக்கவில்லை. என்னை எதிர்த்து விளையாடும் போட்டியாளராக செரீனாவை கருத முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிருக்கு அச்சுறுத்தும் வகையிலான ரத்தம் உறைதலில் இருந்து மீண்டு வந்தேன். மருத்துவமனை படுக்கையில் இருந்து வந்த பின்னர் நடந்து செல்லவோ, நகரவோ கூட முடியாது. தற்போது ஒரு வருடத்துக்குப் பின்னர் பயிற்சிகள் ஏதும் இன்றி இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டியில் இருக்கிறேன். இது நம்பமுடியாததாக உள்ளது” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.