Breaking News
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ. சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை கவர்னர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

லஞ்சம் கொடுத்த மாதவராவையும், அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த ராஜேந்திரன் உள்ளிட்ட இடைத் தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் எல்லாம் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம். ஆனால், குட்கா ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்திருப்பவர்களையும், அந்த லஞ்சப் பணத்தை கொண்டு போய் கொடுத்த இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. ஆனால் அமைச்சரிடமும், டி.ஜி.பி.யிடமும் நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆவணங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் அடிப்படையில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பேரணியாக வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவர்னரை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.