பூனையில்லா வீடு
பல்லைப் பிடுங்கிவிட்ட
நச்சுப் பாம்புகள் நடமாடுகின்றன,
அவை மகுடி இல்லையென்றதும்
இஷ்டம்போல் படமெடுக்கின்றன,
பதுங்கியிருந்த பசுக்களும்
சிங்கம்போல கர்ச்சிக்கின்றன
காட்டை கைப்பற்றியதாய்
கற்பனை கொள்கின்றன,
கானமயில்களை காணாததால்
காட்டுக்கோழிகள் ஆதிக்கம்
செய்கின்றன,
அடக்கி வைக்கப்பட்டதுகள்
அரசியல் பேசுகின்றன
மூடிக்கிடப்பவற்றை திறந்துபாக்க
எத்தனிக்கின்றன
அடையாளம் கிடைப்பதற்காய்
இனத்தை விற்கின்றன
அந்த சிங்கத்தை அடிக்கடி
செய்திகளும் சொல்கின்றன,
ஈனத்தனங்களை வெளிப்படுத்தி
இளிச்சுக்கொண்டு நிற்கின்றன,
கருத்துச் சுதந்திரத்தின்
கற்பையே சூறையாடுகின்றன
நடு நிலையாளர்களாம்
தமக்கு தாமே பெயர் வைத்து
அழைக்கிறார்கள்,
இருக்கும்வரை பொத்திக்
கொண்டு இருந்துவிட்டு
இப்போது கிளம்பியிருக்கிறார்கள்,
நடு நிலையாளர்களாம்
அதிகாரத்தில் உள்ளவன் செய்யும்
அதர்மங்களை கேட்க திரணியில்லை
கோடரிக் கம்புகளின் கொடூரங்கள்
சொல்ல தைரியமில்லை,
எலும்புத் துண்டுகளுக்காய்
முதுகெலும்பையே அடகு வைக்கின்றன
பூனையில்லா வீடு
அதுதான் எலிகளின் அட்டகாசம்..