கன்னியாஸ்திரியை வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: கேரள எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய பேச்சு
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே கன்னியாஸ்திரியை வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு குறித்து கேரளாவின் பூஜார் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ ஜார்ஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கன்னியாஸ்திரியை ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி உள்ளார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்” இந்நிலையில் எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.