சுப்ரீம் கோர்ட்டு நம்முடையது, ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்படும்: உத்தரபிரதேச அமைச்சர் சர்ச்சை பேச்சு
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக உத்தரபிரதேச அமைச்சர் முகுந்த் பீஹாரி வெர்மா ‘சுப்ரீம் கோர்ட்டு நம்முடையது’ எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உ.பி., அமைச்சர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதே நமது கொள்கை. சுப்ரீம் கோர்ட்டு நம்முடையது. நீதித்துறை, நிர்வாகம், இந்திய தேசம் மற்றும் ராமர் கோவில் நமக்கு சொந்தமானது” எனக் கூறினார்.
இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் வலுக்கவே, தான் கூறிய கருத்திற்கு வெர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு பகுதியாகும் மற்றும் அது நமக்கானதாகும். அயோத்தியில் கோவில் கட்டப்படும் என நாங்கள் உறுதியளிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் ப்ரசாத் மெளர்யா, பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரும்புகின்றனர் என சர்ச்சைக்கருத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.