Breaking News
சென்னை மாநகராட்சியின் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம்; ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.5: 5 ஆயிரம் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன

சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தின் கீழ் முதல் ஒரு மணி நேரம் சைக்கிளில் பயணிக்க ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை மாநகராட்சி சார்பில் ‘மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை’ உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்வோருக்கு உகந்த நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக லண்டன், பாரீஸ், நியூயார்க், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரபலமடைந்து வரும் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தை சென்னையிலும் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த சேவையை வழங்க ஜெர்மனி நிறுவனத்தின் இந்தியா விலுள்ள கூட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் ஒரு மணி நேரம் பயணிக்க கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அண்ணா நகர், மெரினா, பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் பல்வேறு ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். இதுபோன்ற மையங்களை திறக்க சென்னை முழுவதும் 440 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2 ஆயிரத்து 500 சைக்கிள்கள், ஜூன் மாதத்துக்குள் மேலும் 2 ஆயிரத்து 500 சைக்கிள்கள் என மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

செயலி மூலமாக..

இந்த சேவையை ஸ்மார்ட் கைபேசி செயலி வழியாக பெற முடியும். அந்த செயலி மூலமாக சைக்கிளை பூட்டவும், திறக்கவும் முடியும்.

முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் தலா ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ரூ.49 செலுத்தி நாள் முழுவதும் சைக்கிளை பயன்படுத்தும் வசதி, நாளொன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.249, 3 மாதங்களுக்கு ரூ.699 கட்டணத்தில் பயன்படுத்தும் வசதிகளும் உள்ளன. இந்த கட்டணங்களுடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

இந்த சைக்கிள்களில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. அதனால் இந்த சைக்கிள்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிய முடியும். இத்திட்டத்தை காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்கிறோம். எந்தெந்த இடத்தில் ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகள் இணைந்து முடிவெடுக்க உள்ளனர்.

பணிமனைகள்

இந்த திட்டத்துக்காக மாநகராட்சி நிர்வாகம் இடம் மட்டுமே தருகிறது. சம்மந்தப்பட்ட நிறுவனம், தன் சொந்த செலவில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. சேவை நிறுவனத்துக்காக 3 இடங்களில் சைக்கிள் பழுது பார்க்கும் பணி மனைகள் அமைக்கவும், ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் மாநகராட்சி இடம் வழங்க உள்ளது. அதற்காக வாடகை எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாநகரம், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் தோல்வி யடைந்தது. எனவே மாநகராட்சியின் சைக்கிள் ஷேரிங் திட்டம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் மிகுந்த கவனத்துடன் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அடுத்த ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் தலா ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ரூ.49 செலுத்தி நாள் முழுவதும் சைக்கிளை பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.