Breaking News
கண்டங்களுக்கான தடகளம்: இந்திய வீரர் அர்பிந்தர் பதக்கம் வென்று சாதனை

சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகள சாம்பியன்ஷிப் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 3-வது கான்டினென்டல் தடகள போட்டி செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவா நகரில் 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) ஆசியா-பசிபிக் அணி சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் அர்பிந்தர்சிங் 16.59 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கப்பதக்கமும் (17.59 மீட்டர்), பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் (17.02 மீட்டர்) பெற்றனர்.

பஞ்சாப்பை சேர்ந்த 25 வயதான அர்பிந்தர்சிங், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இவர் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது நினைவிருக்கலாம்.

அதே சமயம் ஈட்டி எறிதலில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 80.24 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தார். இந்த சீசனில், சர்வதேச அளவில் சோப்ராவின் மோசமான செயல்பாடு இதுவாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.