Breaking News
ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத சிலை மாயமானதாக வழக்கு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திருச்சியை சேர்ந்தவர் எம்.ஆனந்த் மோகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரகதம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீபிரகதம்பாள் சிலையை செய்து, இந்த கோவிலில் வைத்தார்.

பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீமார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக கிரானைட் கற்களால் ஆன சிலையை செய்து கோவிலில் வைத்து விட்டனர்.

சிலை மாயம்

அதேநேரம், அந்த பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள புதுக்கோட்டை சமாஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். இந்த நிலையில், அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்கு சொந்தமானதாக உள்ளது.

எனவே, மாயமான சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசிடம் கடந்த 2013-ம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை மரகத பிரகதம்பாள் சிலையை மீட்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் வருகிற 20-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.