பல்லாவரம் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை: வேலைக்கார பெண் உள்பட 5 பேர் கைது
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் வங்கி மேலாளர் யோகசேரன் (வயது 55) வீட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி கும்பல் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதில் துப்புதுலக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை தெற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹயாத்துல்லா, சுமன், மோகன்ராஜ், போலீசார் செந்தில்குமார், பார்த்தசாரதி, அன்பரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கொள்ளையர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
வேலைக்கார பெண் மீது சந்தேகம்
வேலைக்கார பெண் மகாராணியும் மதுரையை சேர்ந்தவர் என்பதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தின்போது யோகசேரன், அவருடைய மனைவியை கட்டிப்போட்ட கயிற்றின் மீதி பகுதி மகாராணி தங்கியிருந்த வீட்டின் கீழ்தளத்தில் கிடந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்ய போலீசார் கேட்டபோது, கொள்ளையர்கள் தனது செல்போனையும் பறித்துச் சென்றதாக மகாராணி கூறினார்.
அவரது செல்போனில் கடைசியாக பேசியவரின் எண்ணை மகாராணி வீட்டில் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவர் தான் கொள்ளை நடந்தபோது அந்த பகுதிக்கு வந்துசென்றது தெரியவந்தது. எனவே போலீசார் மகாராணியை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
நாய்களை கொன்றார்
போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகாராணி உண்மையை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மதுரையில் இருந்து சென்னை வந்த மகாராணி தெரிந்தவர்கள் மூலமாக வங்கி அதிகாரி யோகசேரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவர் வீட்டு வேலைகளை சரியாக செய்து, விசுவாசமானவர் போல காட்டிக்கொண்டார். தனக்கு சரியாக காது கேட்காது என கூறியும் வீட்டில் இருந்தவர்களின் அனுதாபத்தை பெற்றார்.
வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதை தினமும் நோட்டமிட்ட மகாராணி அவற்றை கொள்ளையடிக்க சில நாட்களாக திட்டம் தீட்டினார். யோகசேரன் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தார். கடந்த மாதம் உணவில் விஷம் கலந்து ஒரு நாயை முதலில் கொன்றார். அடுத்த வாரத்தில் மற்றொரு நாயையும் அதேபோல் கொன்றார்.
திட்டம்போட்டார்
அதன்பின்னர் மகாராணி தனது உறவினரான நாகை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பவருடன் சேர்ந்து கொள்ளை திட்டத்தை வகுத்தார்.
இதற்கிடையில் வங்கி அதிகாரி யோகசேரனின் மகள் மதுரையில் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னை வந்து வங்கி லாக்கரில் தன்னுடைய நகையை வைப்பதற்காக தந்தை வீட்டிற்கு வந்தார். இதனை அறிந்த மகாராணி அந்த நகைகளை கொள்ளையடிக்க முடிவு செய்து அருண்குமாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி அருண்குமார் தன்னுடைய நண்பர்களான மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26), கவுதம் (21) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னைக்கு வந்தார். பல்லாவரம் வந்த 4 பேரும் யோகசேரன் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் 4 பேரையும், யாருக்கும் தெரியாமல் மகாராணி தனது கீழ்த்தள அறையில் தங்கவைத்தார்.
கொள்ளையடித்தனர்
யோகசேரனின் மகள் நகையை தந்தையிடம் கொடுத்துவிட்டு அண்ணாநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார். அப்போது யோகசேரனின் மகனும் வெளியில் சென்றுவிட்டார். இவைகளை கவனித்த மகாராணி, “இது தான் சரியான நேரம். நான் மேலே வேலை செய்ய செல்வதுபோல சென்று கதவை திறந்துவைக்கிறேன். நீங்கள் உள்ளே நுழைந்து என்னையும் சேர்த்து கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டு செல்லுங்கள்” என கூறி வீட்டின் மாடிக்கு சென்றார்.
மகாராணி மாடிக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போடாமல் வீட்டு வேலை செய்வதுபோல உள்ளே சென்றார். கொள்ளையர்கள் மகாராணி அளித்த யோசனையின்படி நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
5 பேர் கைது
மகாராணியிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் மதுரையில் பதுங்கி இருப்பதை போலீசார் அறிந்தனர். செல்போன் எண்களை கொண்டு அவர்களின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து அங்கு விரைந்து சென்று கொள்ளையர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்கள் கொள்ளையடித்த நகைகளை கோவையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களுடன் கோவை சென்ற போலீசார் மறைத்துவைத்திருந்த நகைகளை மீட்டனர். இதையடுத்து வேலைக்கார பெண் மகாராணி உள்பட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படவுள்ளது.