கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
தமிழகத்தையே உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று நடந்தது. கோவையில் 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் பரிதாபமாக பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
தலைமறைவு குற்றவாளி
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட நூகு என்ற ரஷீத் (வயது 44). என்பவர் தலைமறைவாகி விட்டார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கத்தார் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். இவரை கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.
சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு தனிப்படை போலீசார் இவரைத் தேடி வந்தனர். அனைத்து விமான நிலையங்களிலும், இவரைப்பற்றி புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை விமான நிலையத்தில் கைது
இந்தநிலையில் நூகு என்ற ரஷீத் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில், போலீஸ் படையினர் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் காத்திருந்தனர்.
அப்போது கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய நூகு என்ற ரஷீத்தை மாறுவேடத்தில் காத்திருந்த போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
சென்னையில் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.