பிபிஎல் கோப்பையை கைப்பற்றியது விஜயகாந்த் மகனின் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி
டெல்லி: பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் பிவி சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னையில், 2வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இதில், சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், லக்னோ அவாத் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் விளையாட்டில் மொத்தம் 60 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை டெல்லியில் உள்ள சிரி போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை ராக்கெட்ஸ் அணியும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியும் மோதின.
இதில், ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை பி.வி.சிந்து தலைமையிலான சென்னை அணி 4-3 என மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை அணிக்கு இந்த முறையும் கோப்பை கிடைக்காமல் போனது.
வெற்றி பெற்ற சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதுவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் திரைப்பட நடிகருமான சண்முகப் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.