தவறு இருந்தால் நிராகரிப்பு: அமெரிக்க, ‘விசா’வில் கெடுபிடி
அமெரிக்காவுக்கு செல்வதற்காக, ‘விசா’ கோரும்போது, விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால், அதை நிராகரிக்கும் வகையில், புதிய விசா நெறிமுறைகளை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு செல்வதற்கு விசா பெறுவதில், ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மிகவும் நீண்ட, நெடிய, சிக்கலான நடைமுறைகளால், அமெரிக்கா விசா பெறுவது, அவ்வளவு சுலபமான விஷயமல்ல.
இந்நிலையில், விசா பெறும் நடைமுறையில் புதிய கட்டுப்பாட்டை, அமெரிக்க அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், விசா பெறுவதற்கான விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால், போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால், விளக்கம் கேட்கப்படும். கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்து, விசா பெறலாம்.
புதிய முறையில், இவ்வாறு தவறுகள் இருந்தால், போதிய ஆவணங்கள் இல்லாவிட்டால், அந்த விண்ணப்பம், உடனடியாக நிராகரிக்கப்படும். இது, அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான, எச் – 1பி விசா உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும். அதே நேரத்தில், சுற்றுலா செல்லும் பயணியர் மற்றும் வியாபார விஷயமாக செல்வோருக்கு, இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கும், எச் – 1பி விசாவை, இந்தியர்களே அதிக அளவில் பயன்படுத்துவதால், இந்த புதிய நடைமுறையால், இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என, அஞ்சப்படுகிறது.