பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் – பா.ஜனதா தலைவர் அமித்ஷா
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
ஆனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பேட்டி அளித்த பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போரின் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பிரச்சினைகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், பா.ஜனதாவும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுவது குறித்து அமித்ஷா பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும்போது மராட்டியத்திலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபங்களை பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு இல்லை’ என்று தெரிவித்தார்.