சீனாவில் புயல்: 24 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப் போட்ட, ‘மங்குட்’ புயல், ஹாங்காங் மற்றும் சீனாவை நேற்று தாக்கியது. இதையடுத்து, சீனாவில், 24 லட்சம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சின் லுசான் தீவை, ‘மங்குட்’ புயல், நேற்று முன்தினம் தாக்கியது. மணிக்கு, 305 கி.மீ. வேகம் வரை, பலத்த காற்று வீசியது. கன மழையும் பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக, மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன.
மின்வினியோகம் தடைபட்டு உள்ளது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. மங்குட் புயலுக்கு பிலிப்பைன்சில் இதுவரை 28 பேர் பலியாகிவிட்டனர். லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை, பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கி விட்டுள்ளது.
பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட மங்குட் புயல், பலவீனமடையாமல், அங்கிருந்து நகர்ந்து, கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங்கை தாக்கியது. இதன்பின் அங்கிருந்து நகர்ந்து, சீனாவின் குவாங்டாக் மாகாணத்தை தாக்கியது. இதையடுத்து, அங்குள்ள, 24 லட்சத்துக்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தெற்கு சீனாவில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ‘புயல், நாளை பலவீனமடைந்துவிடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.