புளோரன்ஸ் சூறாவளிக்கு அமெரிக்காவில் 13 பேர் பலி
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வீசிய, புளோரன்ஸ் சூறாவளியில் சிக்கி, 13 பேர் பலியாயினர்.அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், புளோரன்ஸ் சூறாவளி, சமீபத்தில் உருவானது. ‘இந்த சூறாவளி, பேரழிவையும் வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்தும்’ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் மக்கள், அப்பகுதியை விட்டு வெளியேறும்படி, அறிவுறுத்தப்பட்டது.இந்த சூறாவளியில் சிக்கி, இதுவரை, 13 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வானிலை மைய தகவலின்படி, தற்போது, 110 கி.மீ., வேகத்தில், காற்று வீசி வருகிறது.சூறாவளியின் வேகம் குறைந்துள்ள போதும், பெரும் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.கரோலினாவில், லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புளோரன்ஸ் சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வடக்கு கரோலினாவை, பேரழிவு பாதித்த இடமாக அறிவித்துள்ளார்.