இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை
இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சானு ஆகியோரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘அர்ஜூனா’ விருது பட்டியலில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்பட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் சிறந்த இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ மற்றும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிறந்த பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருது, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா இந்திய ஆக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதி நடைபெறுவது வாடிக்கையாகும். ஆனால் இந்த ஆண்டு அந்த நாளில் ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியதால் விருது வழங்கும் விழா வருகிற 25-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மிகவும் உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயரை கூட்டாக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் பரிந்துரை செய்துள்ளனர். சூப்பர் சீரிஸ் போட்டியில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயர் பரிசீலனை செய்யப்பட்டாலும், அவரது பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை. விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும். இருப்பினும் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பெரும்பாலும் மாற்றம் எதுவும் இருக்காது.
29 வயதான விராட்கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் குவித்து வருகிறார். விராட்கோலி 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 23 சதம் உள்பட 6,147 ரன்னும், 211 ஒருநாள் போட்டியில் ஆடி 35 சதம் உள்பட 9,779 ரன்னும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எல்லாவற்றையும் சேர்த்து தெண்டுல்கருக்கு (100 சதங்கள்) அடுத்தபடியாக அதிக சதம் அடித்த இந்திய வீரர் விராட்கோலி (58 சதம்) ஆவார்.
விராட்கோலியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு தொடர்ச்சியாக 3-வது முறையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் ஒலிம்பிக்கில் சாதித்த சிந்து (பேட்மிண்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டதால் விராட்கோலி பெயர் நிராகரிக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டில் (2017), இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார்சிங், பாரா ஒலிம்பிக்கில் 2-வது முறையாக தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஹாரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டதால் விராட்கோலியின் பெயர் ஓரங்கட்டப்பட்டது. கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற விராட்கோலிக்கு, கேல் ரத்னா விருது உறுதி செய்யப்பட்டால், இந்த விருதை பெறும் 3-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் (1997), முன்னாள் கேப்டன் டோனி (2007) ஆகியோர் கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர்.
கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மணிப்பூரை சேர்ந்த 24 வயதான மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததுடன், இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். காயம் காரணமாக இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
அர்ஜூனா பட்டியலில் 20 பேர்
சிறந்த வீரர்களுக்கான அர்ஜூனா விருது பட்டியலில் ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியவருமான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஜூனியர் உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி வந்தனா, இந்திய ஆக்கி அணி வீரர் மன்பிரீத்சிங், வீராங்கனை சவிதா பூனியா, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ரோகன் போபண்ணா, காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், சிக்கி ரெட்டி (பேட்மிண்டன்), ஷூபான்கர் சர்மா (கோல்ப்), ராஹி சர்னோபாத், அங்குர் மிட்டல், ஸ்ரேயாஷி சிங் (மூவரும் துப்பாக்கி சுடுதல்), சுமித் (மல்யுத்தம்), பூஜா காடியன் (வுசூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மஜோஜ் சர்கார் (பாரா பேட்மிண்டன்), ரவி ரதோர் (போலோ) ஆகிய 20 பேரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
துரோணாச்சார்யா விருது
சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு மீராபாய் சானுவின் பயிற்சியாளர் விஜய் ஷர்மா (பளுதூக்குதல்), குட்டப்பா (குத்துச்சண்டை), சீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்), தராக் சின்ஹா (கிரிக்கெட்), கிளாரன்ஸ் லோபோ (ஆக்கி), ஜிவான் குமார் சர்மா (ஜூடோ), ஜிவான்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை) ஆகியோரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருதுக்கு பரத் செட்ரி (ஆக்கி), சத்யதேவ் பிரசாத் (வில்வித்தை), டாடு சோக்லே (மல்யுத்தம்) ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது பெறுபவர்களுக்கு சான்றிதழுடன், ரூ.7½ லட்சமும், அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் விருது பெறுவோருக்கு சான்றிதழுடன் ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.