நைஜிரியாவில் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்கு விற்கும் வழக்கம்
நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் தங்கள் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்காக விற்பனை செய்து வருவது மீண்டும் விவாதமாகியுள்ளது.
பெசவோ இன மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை காலா காலமாக சந்தித்து வருகின்றனர்.
கடன் வாங்குவதும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மக்கள் தங்கள் பிள்ளைகளை திருமணத்திற்காக விற்கும் அவலம் அங்கு நடந்தேறி வருகிறது.
இந்த வழக்கத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு, தமது கண்ணீர் கதையை சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதில், தம்முடன் உறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதியவர் ஒருவர் தம்மை விலை தந்து வாங்கியதாகவும், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் வலுக்கட்டாயமாக தன்னை பிடித்திருக்க, அந்த முதியவர் உறவு வைத்துக் கொண்டார் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
டோரொத்தி என்ற அந்த சிறுமி தமக்கு தாத்தா வயதுடைய நபருடன் நிர்பத்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
கடன் சுமை அதிகரித்ததால் வேறு வழியின்றி தாயார் மற்றும் உறவினர்களால் டோரொத்தி விற்பனை செய்யப்பட்டார்.
டோரொத்தி முதன் முறையாக கருவுறும்போது அவருக்கு 12 வயது கூட நிரம்பவில்லை.
பெசவோ இன மக்களால் விற்கப்படும் சிறுமிகள் வாங்கும் ஆண்களின் உரிமைச் சொத்து. சில சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர், எஞ்சியவர்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கத்தை அரசு தடை செய்துள்ளதாகவும், இதுபோன்ற வழக்கம் தற்போது நடைபெறுவதில்லை எனவும் அரசு சார்பில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் மீட்க்கப்பட்ட சிறுமி ஒருவர் தம்மை வாங்கிய அந்த நபர் கொடூரமாக துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும், கொன்றால் கூட எவரும் கேட்க மாட்டார்கள் என அடிக்கடி கூறி வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
கொடூரத்தின் உச்சமாக, முதியவர் ஒருவருக்கு விற்கப்பட்ட 7 வயதே நிரம்பிய சிறுமி ஒருவரை அதிகாரிகள் சமீபத்தில் மீட்டுள்ளனர்.
உலகில் உள்ள எஞ்சிய குழந்தைகளை போலவே உரிமை கொண்ட இந்த சிறுமிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே என சமூக ஆர்வலர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.