காவலர் நிறைவாழ்வு பயிற்சி தொடக்க விழாவில் தமிழக போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கிய 9 அறிவுரைகள்
பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாக தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. காவல்துறையில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்தன. காவலர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்பதற்கான காவலர் நலன் காக்கும் உன்னத திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்போது தமிழக காவல்துறைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.காவலர் நிறைவாழ்வு பயிற்சி என்ற அந்த உன்னத திட்டத்தின் தொடக்கவிழா நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது தமிழக போலீசாருக்கு 9 அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக விளங்குவது தமிழ்நாடு காவல்துறை. இத்துறையை மேலும் செம்மைப்படுத்தி, அதன் சிறந்த செயல்பாட்டிற்கு மேலும் ஊக்கம் அளித்திடும்நோக்கில், இந்த “நிறை வாழ்வு பயிற்சி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினரும், அவர்தம் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை இந்த அரசு நன்கு அறியும்.
எனவே, காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக மிகுந்த பரிசீலனைக்குப் பின்பு, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே இந்த ஏற்றமிகு “காவலர் நிறைவாழ்வு பயிற்சி” திட்டம்.
இந்த திட்டம் பெங்களூரில் உள்ள, உலகத்தரம் வாய்ந்த “நிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால், தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகும்.
அனைத்து மாவட்டம் மற்றும் காவல் பிரிவுகளிலும், சிறப்பு பிரிவுகளிலும் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும். இதற்கென, காவல் துறையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.
அடுத்த ஒருவருட காலத்திற்கு இந்த முதன்மை பயிற்சி அளிக்கப்படும். பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் 2 வருட காலங்களுக்கு காவலர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதிக அளவு மன அழுத்தம் உள்ளோருக்கு, தனியாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும். அனைத்து முதன்மை பயிற்சியாளர்களுக்கும் ஆற்றுப்படுத்துதலில் ஒரு பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.
காவல் துறையினர் பணிபுரியும் இடம் மற்றும் அவர்களின் குடும்பங்களில் நல்ல சூழல் நிலவுவதற்காக, கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில அறிவுரைகளை இங்கே உங்களுக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
* காவல்துறையினர் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடற்பயிற்சி, நடை பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் பலவீனங்களை பலங்களாக மாற்றிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை படியுங்கள். நல்ல புத்தகங்கள் படிப்பதையும், ஊக்கமூட்டும் உரைகள் கேட்பதையும் ஒரு அன்றாட பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் உங்களது நேரத்திலோ அல்லது பணத்திலோ ஒரு பகுதியை ஒழுங்கான திட்டமிட்ட முறையில் ஏதாவது தர்ம காரியங்களுக்கு அர்ப்பணியுங்கள்.
*தீய ஆதிக்கங்களிலிருந்து விலகி இருங்கள். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
*மனமார்ந்த பாராட்டுதல்களை கனிவுடன் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் பயிலுங்கள்.
*உங்களது செயல்களுக்கும், நடத்தைக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள தொடங்குங்கள்.
* அசவுகரியமாக இருக்கும் பட்சத்தில் கூட சுய கட்டுப்பாட்டை தவறாது கடைபிடியுங்கள்.
* உயர்ந்த ஒழுக்க பண்புகள் உடையவர்களோடு பழகுங்கள்.
* படைப்பாற்றல் உள்ளவராக இருந்து உங்களது பலவீனங்களை உங்களது பலங்களாக மாற்றும் வழியை கண்டு பிடியுங்கள்.
* பொறுமையுடன் இருங்கள். பலன்கள் கண்ணுக்கு புலப்படாத போதிலும் தொடர்ந்து செயலாற்றுங்கள்.
இந்த நிறைவாழ்வு பயிற்சியை நடத்துவதற்காக இவ்வாண்டிற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அம்மாவின் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பயிற்சியானது தமிழ்நாடு காவல் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது. காவல் துறையினரும் அவரது குடும்பத்தினரும் இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
காவலர் நிறைவாழ்வு பயிற்சியை பெங்களூருவில் உள்ள “நிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் முன்னின்று செய்கிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் கங்காதரும், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திட்டனர். விழாவின் தொடக்கத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி.க்கள் கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், காந்திராஜன், திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
விழாவின் இறுதியில் நலத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நன்றி தெரிவித்தார்.