Breaking News
சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து, இந்த திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மேலும் சிலரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அட்டவணை மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், “8 வழி சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு விட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், “8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. விதிகளின்படி, இதுபோன்ற நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ளலாம். அதே விதிகளின்படி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மேற்கொண்டு மேற்கொள்ள முடியாது. அதனால், இந்த திட்டத்தை தொடர மாட்டோம்” என்று கூறினார். அதாவது, திட்டம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் இவ்வாறு கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1,200 மரங்களை நட இருப்பதாகவும் அவர் கூறினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சிவஞானசம்பந்தன் கூறுகையில், பசுமைச்சாலை திட்டத்தினால், பாதிக்கப்படும் நபர்களுக்கு எழுத்துப்பூர்வமான மனுக்களை எழுதி கொடுத்த 4 பேரை செய்யாறு போலீசார் கைது செய்து இருப்பதாக தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், போலீசாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்த திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசும், அதிகாரிகளும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும், யாரையும் துன்புறுத்தவேண்டாம் என்றும் பலமுறை நாங்கள் கருத்து தெரிவித்து உள்ளோம். அதையும் மீறி 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். எனவே, இதுகுறித்து அரசு பிளடர், போலீசாரின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டம் தொடர்பான களப்பணியில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பிரச்சினையை பெரிதுப்படுத்தக்கூடாது. மக்களை துன்புறுத்தக்கூடாது. இந்த செயலை தொடர்ந்து செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

பின்னர் அவர்கள் வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.