மதுரவாயல் இன்ஸ்பெக்டர் மீது நடிகை வனிதா பரபரப்பு புகார் ‘தரக்குறைவாக பேசி அடித்து உதைத்தார்’
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்படும் அந்த வீட்டை அவருடைய மூத்த மகள் வனிதா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு பெற்று தங்கியிருந்தார்.
படப்பிடிப்பு முடிந்த பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்யாததால் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் விஜயகுமார் புகார் செய்தார். வீடு தொடர்பான ஆவணங்களையும் அவர் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் தலைமையில் பெண் போலீஸ் உள்பட போலீசார் அங்கு சென்று வனிதாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். அப்போது வனிதா மற்றும் அந்த வீட்டில் தங்கியிருந்த அவருடைய நண்பர்கள் வீட்டை காலி செய்ய மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வனிதா மற்றும் அவரது நண்பர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அந்த வீட்டை பூட்டுபோட்டு பூட்டி, சாவியை நடிகர் விஜயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வனிதாவின் நண்பர்களான நரேந்திரன் (வயது 45), ஆண்ட்ரூஸ் (45), ஜோசப் மனோஜ் (43), பாலா (46), சத்யசீலன் (37), தியாகராஜன் (40), மணிவர்மா (53) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வனிதா மீதும் போலீசார் இந்த 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை வனிதா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழுதபடி வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் நடிகை மஞ்சுளாவின் மகள். நடிகர் விஜயகுமார் எனக்கு தந்தை. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். நான் மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள என் தாயார் மஞ்சுளாவின் வீட்டில் வசித்து வந்தேன்.
நான் வசித்த வீடு எனது தாயார் பெயரில் மஞ்சுளா இல்லம் என்றுதான் உள்ளது. தாய் வீட்டில் மகளுக்கு வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. எனது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. 13 வயதில் என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். 3 குழந்தைகள் உள்ளனர்.
எனது வாழ்க்கையில் போராட்டங்களையே சந்தித்து வருகிறேன். நான் வசித்த வீட்டின் முகவரியை வைத்துதான் ஆதார் அட்டை வாங்கி உள்ளேன். எனது வங்கி கணக்கும் அந்த வீட்டின் முகவரியில்தான் உள்ளது. பாஸ்போர்ட்டும் அந்த முகவரியில்தான் வாங்கி உள்ளேன்.
அந்த வீட்டை நான், எனக்கு எழுதி கேட்கவில்லை. அந்த வீட்டில்தான் எனது தாயார் இறந்தார். எனது கையில் சாய்ந்து படுத்தநிலையில்தான் எனது தாயார் மஞ்சுளாவின் உயிர் போனது.
நான் சொந்தமாக ‘டாடி’ என்ற பெயரில் படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். அந்த வீட்டு முகவரியில்தான் எனது சினிமா பட தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. எனது 13 வயது மகளும் என்னோடுதான் தங்கி உள்ளார். தற்போது அந்த வீட்டில் கடந்த 20 நாட்களாக படப்படிப்பு நடத்தி வந்தேன்.
திடீரென்று எனது தந்தை விஜயகுமார் வீட்டை காலி செய்யும்படி கூறினார். வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்போவதாக சொன்னார்.
நான் எங்கே போவேன்? நான் சம்பாதித்த பணத்தை உங்களிடம்தானே கொடுத்தேன். இந்த வீட்டை நான் எழுதி கேட்கவில்லை. 25 ஆயிரம் சதுர அடியில் உள்ள அந்த வீட்டில் மேல்மாடியில் ஓரமாக எனது மகளோடு தங்கிக்கொள்வதற்கு அனுமதியுங்கள். வீட்டின் மற்ற பகுதியை நீங்கள் வாடகைக்கு விடுங்கள் என்று கெஞ்சினேன்.
சொந்த வீட்டுக்கு யாராவது வாடகை கொடுப்பார்களா? ஆனால் சினிமா படப்பிடிப்புக்கு எனக்கு வாடகைக்கு விட்டிருந்ததாக எனது தந்தை சொல்கிறார். அவ்வாறே புகாரும் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த தொல்லையால் என்னை தொடர்ந்து அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு போட்டேன்.
உடனே அவசர அவசரமாக என்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக போலீசில் புகார் கொடுத்துவிட்டார். அந்த வீட்டை சொந்தம் கொண்டாடி நான் வழக்கு போடவில்லை. எனது தாயார் பெயரில் உள்ள அந்த வீட்டில் வாழ்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது போலீசார் எப்படி தலையிட முடியும்.
என்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் போலீஸ் படையோடு வந்து அடித்து உதைத்து வெளியேற்றினார். என்னை தரக்குறைவாக திட்டி எனது முகத்தில் தாக்கினார். எனக்கும் சட்டம் தெரியும்.
சொந்த வீட்டில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கு போலீசுக்கு எப்படி உரிமை வந்தது? ஒரு புகார் கொடுத்தால் அதில் உள்ள உண்மைத்தன்மையை போலீசார் விசாரிக்க வேண்டுமல்லவா? சென்னையில் பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் புகார் கொடுக்கிறார்கள்.
அந்த புகார் மனுக்களுக்கு எல்லாம் உடனடியாக இதுபோல் நடவடிக்கை எடுக்கிறார்களா? ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், அதுவும் நான் பிரபல நடிகை என்றுகூட பார்க்காமல் என்னை இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்து காயப்படுத்தி வெளியேற்றினார்.
என்னோடு அந்த வீட்டில் தங்கி இருந்தவர்கள் சினிமா படப்பிடிப்பு குழுவினர். ஒரு ஆர்ட் டைரக்டர் அதில் உள்ளார். சீனியர் நடன இயக்குனர் ஒருவரும் அந்த குழுவில் இருந்தார். அவர்களை எல்லாம் ரவுடிகள்போல் சித்தரித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் பெப்சி சங்கத்தை சேர்ந்தவர்கள். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் எனக்கு செய்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டுதான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். போலீஸ் கமிஷனர் எனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளேன்.
இணை போலீஸ் கமிஷனரை சந்திக்கும்படி கூறி இருக்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்க உள்ளேன்.
இயக்குனர் ஹரி எனது சகோதரியின் கணவர். நடிகர் அருண் விஜய் எனது சகோதரர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் எனது தந்தை விஜயகுமார் இதுபோல் நடந்து கொள்கிறார். ஏற்கனவே எனது தாயார் பெயரில் இருந்த 8 சொத்துகளை நடிகர் அருண்விஜய் அவரது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக்கொண்டார்.
என் தந்தை என்னிடம் தகராறு செய்தபோது, நடிகர் அருண்விஜய் காரில் வெளியே காத்திருந்தார். அவர்களுக்கு சொத்து உள்ளது. நல்ல வசதியோடு வாழ்கிறார்கள். நான் என் குழந்தைகளோடு கஷ்டப்படுகிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.