பாகிஸ்தானின் கைப்பாவையாக ராகுல்காந்தி செயல்படுகிறார் – மத்திய மந்திரி கடும் தாக்கு
ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். இதில் ஊழல் நடந்துள்ளது தெளிவாக தெரிவதால் மோடி இதுபற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இதுவரை எந்தவொரு கட்சியின் தலைவரும் பிரதமருக்கு எதிராக பயன்படுத்தாத வார்த்தைகளை ராகுல்காந்தி பயன்படுத்தி இருக்கிறார். இது வெட்கக் கேடானது. பொறுப்பற்றதும் ஆகும்’’ என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:–
பொய்யான தகவல்களை தரும் ஒருவரை திருப்தி படுத்துவதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிடக் கோருவதன் மூலம் ராகுல்காந்தி பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பேரம் முடிவு செய்யப்படாததன் காரணமாகவே ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனமும், டசால்ட் நிறுவனமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே அதாவது, 2013–ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன. அதாவது நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்பாகவே இது நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.