பிரதமர் பதவி விலக வேண்டும் ; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்ததில் மத்திய அரசின் பங்கை பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே விளக்கி உள்ளார். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள இடதுசாரி கட்சிகள், மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளன.
இந்த முறைகேட்டுக்கு பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்க வற்புறுத்தியதன் மூலம் இந்த முறைகேட்டில் பிரதமருக்கு நேரடியாக பங்கு இருப்பதாக கூறியுள்ள அந்த கட்சி, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோ, ரபேல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை தாமதமின்றி அமைத்து விசாரணை நடத்துவதுடன், இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அரசின் பங்கு குறித்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் ஒரு முதல் தர ஊழலாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள அந்த கட்சி, இதில் உள்ள உண்மைகளை மோடி அரசு வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது