Breaking News
எண்ணூர் துறைமுகத்துக்கு மலேசியா நாட்டு மணல் வந்தது அக்டோபர் முதல் வாரத்தில் வினியோகம்

தமிழகத்தில் ஏற்பட்ட மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப்பணிகள் முடங்கின. இதனால் மாற்று ஏற்பாடாக பொதுப்பணித்துறை ‘எம்-சாண்ட்’ என்று அழைக்கப்படும் பாறை துகள்களை மணலாக தயாரித்து விற்பனை செய்து வந்தது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி மணல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதில் ஐதராபாத்தை சேர்ந்த ஐ.ஆர்.வி.எஸ். என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முறையாக அந்த நாட்டில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து எம்.வி.ஆரேலியா என்ற கப்பல் 56 ஆயிரத்து 750 டன் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

துறைமுகத்தில் உள்ள சவுத் இந்தியா கார்ப்பரேசன் நிறுவனத்தின் 1½ ஏக்கர் நிலத்தில் மணல் இறக்குமதி செய்ய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி 2 நாட்களில் நிறைவடையும். பின்னர் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மணல், பொதுப்பணி துறையிடம் ஒப்படைக்கப்படும்.

பொதுப்பணித்துறை சார்பில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மணல் விற்பனை செய்யப்படுகிறது. மணல் தேவைக்காக இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கே நேரடியாக மணல் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் மணல் தட்டுப்பாடு பிரச்சினை நீங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.