ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார். இரண்டு நாட்கள் அமேதியில் இருக்கும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு பாதுகாப்பில் ராகுல் காந்தி உள்ளதால், அவரது வருகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமேதியில் உள்ள முசாபிர்கானா பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் உத்தரபிரதேச மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விஐபிக்கான காவல் பணியில் இருந்து ஈடுபட்டு இருந்த போலீசார் ஒருவர், எஸ்.பி.ஜி படை பிரிவு அதிகாரியை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஐபி பாதுகாப்பு பணியில் இருந்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அமேதி காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா, “ விஐபிக்கு பாதுகாப்பு அளிக்க வந்த எஸ்.பி.ஜி பிரிவினர் சாதாரண உடையில் வந்ததால், குழப்பம் ஏற்பட்டதாகவும் இதனால், போலீஸ் கான்ஸ்டபிள், எஸ்.பி.ஜி படையைச்சேந்த அதிகாரியை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எஸ்.பி.ஜி அதிகாரி கூறியபடி, நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்ட காவலர் மதுபோதையில் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.