அடுத்த 36 மணி நேரத்திற்கு உத்தரகாண்ட்டில் மிக கனமழை எச்சரிக்கை
இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சலபிரதேசம், ஜம்மு, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. மழையால் நெல் மற்றும் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
உத்தரகாண்ட்டில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. குறிப்பாக கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் கேதர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளானர். மாநிலங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் பேய்மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே அடுத்த 36 மணி நேரத்திற்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இமாலச்சலபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அம்மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளன. இதனிடையே இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 60 பேர் கடும் வெள்ளத்தால் சிக்கி தவிக்கின்றனர்.