மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது அபார வெற்றி – சீனாவுக்கு பலத்த அடி
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ள குட்டித் தீவு நாடு மாலத்தீவு. கடந்த சில மாதங்களாக இங்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நாட்டின் அதிபராக 2013-ம் ஆண்டு முதல் அப்துல்லா யாமீன் பதவி வகித்து வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் தள்ளியது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டது, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அப்துல்லா யாமீன் ஆளானார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தின. இதனால் அவருக்கு செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்பட்டது. அதே நேரம் சீனா அவருக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கம் அவ்வளவாக எடுபடவில்லை. மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமாக தானாக முன்வந்து அப்துல்லா யாமீனுக்கு சீனா ஆதரவு அளித்தது.
இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலத் தீவு ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவரான 54 வயது இப்ராகிம் முகமது ஷோலி நிறுத்தப்பட்டார். பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் இருப்பதாலும், பல தலைவர்கள் தலைமறைவாக உள்ளதாலும் அவர்களால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இந்த தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே அரசியல் நோக்கர்கள் கூறினர். ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சி மோசடியில் ஈடுபடலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து இருந்தன. இதன் காரணமாக அப்துல்லா யாமீனுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மாலத் தீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,62,135. இவர்களில் 2,33,877 பேர் தேர்தலில் ஓட்டுப் போட்டனர். இது 89.22 சதவீதம் ஆகும்.
இந்த தேர்தல் முடிவுகளில் மக்களின் மனநிலை அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக வெளிப்பட்டது. பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டபோது எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராகிம் முகமது 1 லட்சத்து 34 ஆயிரத்து 616 ஓட்டுகளும் (58.3 சதவீதம்), அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 96 ஆயிரத்து 132 ஓட்டுகளும் (41.7 சதவீதம்) கிடைத்து இருந்தது. இப்ராகிம் முகமது அபார வெற்றி பெற்றார். இதனால் சீனாவுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. சீனாவுக்கு வால் பிடிப்பதை மாலத் தீவு மக்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டு உள்ளது. மக்கள் மவுனப் புரட்சி மூலம் அப்துல்லா யாமீனை தோற்கடித்து உள்ளனர்.
இந்த நிலையில் டெலிவிஷனில் தோன்றி பேசிய அதிபர் அப்துல்லா யாமீன் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருப்பதை இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்று உள்ளன.
இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதை ஜனநாயக கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். மாலத் தீவு நாட்டின் கொடிகளுடன் அவர்கள் இசைக் கருவிகளை இசைத்தவாறு பல இடங்களில் ஊர்வலங்களும் நடத்தினர்.
தேர்தல் முடிவுகள் தெரியவந்துவிட்டாலும், அதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மாலத் தீவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “அதிபர் தேர்தல் முடிவுகள் ஒருவாரத்துக்கு அறிவிக்கப்பட மாட்டாது. தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் கட்சிகள், கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒருவாரத்துக்கு தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.