வங்கிகளின் கடன் வசூல் அதிகரிக்கிறது, வாராக்கடன் குறைகிறது – நிதி மந்திரி அருண் ஜெட்லி
டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் கடன் தேவைகளை கவனிக்க ஏற்ற வகையில் வங்கிகள் தங்கள் சொந்த பலத்தில் வளர்ச்சி அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோசடி செய்கிறவர்கள், வேண்டுமென்றே கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தகைய நடவடிக்கை, இந்தியா 8 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் அருண் ஜெட்லி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுத்துறை வங்கிகள் அளித்து வந்த கடன்களில் பெரும்பகுதி வாராக்கடன்கள் ஆக நின்று விட்டன. இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகள், பொதுத்துறை வங்கிகளுக்கு சவாலாக அமைந்து விட்டன.
கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து வசூல் செய்வதற்கு வசதியாக திவால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், வங்கிகளின் கடன் வசூல்கள் அதிகரித்து இருக்கின்றன. வாராக்கடன் குறைந்து இருக்கிறது.
கடன் வசூல் நல்ல விதமாக அமைந்து உள்ளது. வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் பெருகி இருக்கிறது. கடன் வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏறுமுகத்தில் செல்கிறது.
பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில், நாம் நல்ல வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. எனவே வங்கிச்செயல்பாடுகள் முன்னேற்றம் அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
நிதிச்சேவைகள் செயலாளர் ராஜீவ் குமார் கூறும்போது, வங்கிகள் திவால் சட்டத்தின் மூலமாகவும், பிற வழிமுறைகள் மூலமாகவும் நடப்பு நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன்களை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வருமானவரி கணக்கு விவரங்கள், சரக்கு, சேவை வரி தகவல்கள், வங்கி கணக்கு நிலவர அறிக்கைகளை அளித்து, எங்கும் செல்லாமல் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடன் பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.